இந்த வார ஆனந்த விகடனில் வந்த ஒரு கவிதை என்னை நெடுநேரம் மனம் நெகிழ வைத்து கலங்க வி்ட்டது. தமிழ் மக்களின் யதார்த்த மனநிலையை மனைவி என்ற சாதாரண மனுஷி முலமாக கோடிட்டு காட்டியுள்ளார் கவிஞர். படைப்புகளை வாசிக்கும் அனுபவம் உள்ள என்னை போன்ற மனிதர்களின் மனதில் சிறு சிறு சலனத்தை ஏற்படுத்தகூடிய இது போன்ற கவிதைகளின் தாக்கம் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுமேயானால் அது சமுக மாற்றத்திற்கு பெரிதும் துணையாயிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. படைப்புகளின் வீரியம் எந்த அளவிற்கு சமுகத்தை சிந்திக்க வைக்கிறது...சீர்படுத்த முயல்கிறது மேலும் அது இலக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி பத்திரிக்கைகளில் கோலோச்சி வருகிறது என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.
நித்யானந்தாவும்... என் மனைவியும்!
நித்யானந்தாவை
நித்தமும் பழிக்கும்
என் மனைவிக்கு
இன்று வரை தெரியாது
முத்துக்குமார் என்றொருவன்
மரித்துப்போனது.
என்றாவது ஒருநாள்
எனது நாட்குறிப்பிலுள்ள
அவன் புகைப்படத்தைக் காட்டிக் கேட்பாள்
அப்போது சொல்லிக்கொள்ளலாம்...
நம்மையெல்லாம் ஏமாற்றினானே
ஒரு நித்யானந்தா
அவனைப்போல
நம் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்தான்
இந்த முத்துக்குமாரென்று!
- முத்துரூபா
நாமெல்லாம் சூடுசுரணையற்று மறந்து போன தோழர் முத்துக்குமாரின் வீரத்தியாகத்தை நாலைந்து வரிகளில் கவிதையாய் புனையும் போது வரும் “உள்ள நெகிழ்ச்சி“ அந்த தமிழ் மறவனை இன்னும் சில வருடங்களுக்கு நினைவில் நிறுத்த போதுமானதாக இருப்பதாய் தோன்றுகிறது.
தமிழர்கள் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். நேற்று ஈழத்தை ஆதரித்தவர்கள், போராடியவர்கள் இன்று தனித்தனி குழுக்களாக பிரிந்து போய்விட்டிருக்கின்றனர். ஆதரவையும் போராட்டத்தையும் ஒடுக்கியவர்கள் மக்களை வேறு திசைக்கு திருப்பி களியாட்டங்களிலும், தமிழ் வளர்ச்சி என்ற போலியான உணர்வுகளிலும் ஈடுபடுத்தியுள்ளனர்.
தமிழன் தன்னையே சுயபரிதாபத்தில் ஆழ்த்திக்கொண்டு நீள் கனவு கண்டு கொண்டிருக்கிறான்.
அதுவரை காலங்களிலும், இது போன்ற கவிதைகளிலும் நாம் முத்துக்குமாரை தரிசித்துக்கொண்டிருப்போம்.